கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி நகராட்சி போகனப்பள்ளி அருகே, 25 அடி சாலை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மண்டபத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவில்லை.
இதையடுத்து நேற்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் தலைமையில் ஆக்கிரமிப்பு பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
அதே போல் நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சென்னை சாலை, பெங்களூரு சாலை பகுதி கடைகளில் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட, 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் வசூலிக்கப்பட்டது.
நகரமைப்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், செழியன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருண், வருவாய் உதவியாளர் சங்கர், நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணச்சரண், உதயகுமார், தேவேந்திரன், மாதேஸ்வரன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.