பழுதான மின் சாதனங்களை அதிகாரிகள் ஆய்வு
நெல்லையில் பழுதான மின் சாதனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் தீபாவளியன்று மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இந்த கடும் மழையால் மணிமுத்தீஸ்வரம், வடக்கு பாலபாக்கியநகர் 5, 6, 7- வது தெருக்களுக்கு செல்லும் மின் பாதையில் உள்ள ஆர்.எம்.யூ. (ரிங்க் மைன்ட் யூனிட்) மற்றும் பீங்கான்வட்டு சேதம் அடைந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு உதவி மின் பொறியாளர் அபிராமிநாதன், அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் மின்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இரவு 8.55-க்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது. கடுமையான புகை மண்டலம் மின்பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
நேற்று காலையில் மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி பழுதான மின்சாதனங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆலோசனை வழங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நெல்லை நகர்ப்புற மின்கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர் அபிராமிநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.