யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு


யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது யானைகள் எளிதில் கடந்து செல்லும் வகையில் புல் தரை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது யானைகள் எளிதில் கடந்து செல்லும் வகையில் புல் தரை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

யானை வழித்தடம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரெயில் பாதை அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இதனால் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை குடைந்து, சாலை அமைக்கப்பட்டு உள்ளதால் குறுகலாக உள்ளது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், குறுகலாக உள்ள பகுதிகளில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவை தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலையை கடந்து செல்கின்றன. இந்தநிலையில் யானைகள் சாலையை கடந்து செல்லும் வகையில், ஏற்கனவே உள்ள யானை வழித்தடத்தில் கான்கிரீட் பாதை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், யானைகள் அந்த வழியில் செல்லவில்லை.

சேற்றில் வழுக்கியது

தொடர் மழையால் சேறும், சகதியுமான பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் வழுக்கியபடி சென்றன. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. தொடர்ந்து கான்கிரீட்டால் ஆன வழித்தடத்தில் செல்லாமல், வேறு வழியாக ஆபத்தான முறையில் சென்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் சேற்றில் சறுக்கி சென்ற நந்தகோபால் பாலம் அருகே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோபிசெட்டிபாளையம் கோட்ட பொறியாளர் செல்வம், சேலம் தர கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் குப்புசாமி, ஊட்டி உதவி கோட்ட பொறியாளர் சங்கர் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து காட்டு யானைகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட கான்கிரீட் பாதையை அகற்றி, யானைகள் எளிதில் கடந்து செல்லும் வகையில் புல் தரை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story