வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை:1 டன் வெல்லம்-நாட்டு சர்க்கரை பறிமுதல்
வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி 1 டன் வெல்லம்-நாட்டு சர்க்கரையை பறிமுதல் செய்தனா்.
பவானி
பவானி அருகே பெரிய புலியூர் மற்றும் குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் குண்டு வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கு தயாரிக்கப்படும் வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் பவானி உணவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமி, பவானி நகர உணவு ஆய்வாளர் சதீஷ், கோபி நகர உணவு ஆய்வாளர் குழந்தை வேலு, சத்தியமங்கலம் நகர உணவு ஆய்வாளர் மணி ஆகியோர் வெல்லம் தயாரிப்பு ஆலைகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
மொத்தம் 10-க்கும் மேற்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கலப்படம் செய்யப்பட்ட சுமார் 750 கிலோ மதிப்புள்ள அச்சு வெல்லம் மற்றும் குண்டு வெல்லம், 250 கிலோ மதிப்பிலான நாட்டுச் சர்க்கரையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவற்றின் மாதிரிகள் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.