கடலூரில்தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வுதகுதி இல்லாத 12 வாகனங்களை இயக்க தடை
கடலூரில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் தகுதி இல்லாத 12 வாகனங்களை இயக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
தனியார் பள்ளி வாகனங்கள்
கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி கடலூர் வட்டார போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
இந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சபியுல்லா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேக கட்டுப்பாட்டு கருவி
அப்போது பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால வழி உள்ளதா?, அவை சரியான முறையில் இயங்குகிறதா?, முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா?, வாகனத்தின் கதவுகள், தாழ்ப்பாள்கள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளி வாகன டிரைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
அதன் பிறகு வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதியில் மொத்தம் 93 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் மாணவர்களை ஏற்றி வருவதற்காக 297 வாகனங்களை பயன்படுத்துகின்றன. இந்த ஆய்வு அரசு விதிகளுக்குட்பட்டு செய்யப்படுகிறது. பள்ளி வாகனத்தின் முன்பக்க இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், விலாசம், தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் பின்பக்க இடதுபுறத்தில் பள்ளி வாகன பொறுப்பாளர் தொலைபேசி எண், வட்டார போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண், பள்ளி எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண், பள்ளியின் மின்னஞ்சல் முகவரி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
12 வாகனங்கள் இயக்க தடை
ஒவ்வொரு வாகனத்திலும் அவசரகால கதவு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட அரசு விதிகளின்படி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து பொருட்கள் வைத்திருந்ததற்காகவும், தீயணைப்பு கருவி காலாவதி ஆனதாலும், பஸ்சிற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததாலும் 12 வாகனங்களை இயக்க தடை விதித்து, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த பஸ் டிரைவர்கள், 10 நாட்களுக்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என்றார்.
மருத்துவ முகாம்
தொடர்ந்து, தீயணைப்பு துறையின் சார்பில் தீத்தடுப்பு தொடர்பான விளக்கவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.