ரூ.5 கோடியில் நடைபெறும் மேம்பால பணியை அதிகாரி ஆய்வு


ரூ.5 கோடியில் நடைபெறும் மேம்பால பணியை அதிகாரி ஆய்வு
x

மோர்தானா-போடியப்பனூர் இடையே ரூ.5 கோடியில் நடைபெறும் மேம்பால பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறும்போது கவுண்டன்ய மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது ஆற்றின் ஒரு கரையில் உள்ள மோர்தானா, ஜங்காலப்பல்லி ஆகிய கிராமங்களும், மற்றொரு கரையில் உள்ள போடியப்பனூர், ராகிமானப்பல்லி ஆகிய கிராமங்களும் துண்டிக்கப்படுகின்றன.

இதனால் இந்த கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். மூங்கில் கம்புகளால் ஆன பாலம் மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வந்தனர். எனவே அப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதன்பேரில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 117 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டப்படும் பணியை வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை, ஒன்றிய பொறியாளர் குகன், மோர் தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story