புதிய பஸ் நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு
திருச்சுழியில் புதிய பஸ் நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருச்சுழி,
திருச்சுழியில் புதிய பஸ் நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்
திருச்சுழியை மையமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இவ்வூரில் தாலுகா அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டுஅலுவலகம், கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், வங்கிகள் உள்பட எண்ணற்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் திருச்சுழி வந்து கமுதி, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கின்றனர்.
அதேபோன்று திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இங்கு வந்து பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சுழி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பஸ்
ஆதலால் திருச்சுழியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத்தம்பி இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். இந்தநிலையில் திருச்சுழி ஆற்றுப்பாலம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்கும் படி அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் மாவட்ட செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அதிகாரிகள் பஸ்நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதற்கான திட்ட மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது திருச்சுழி நகர செயலாளர் சிவக்குமார் உடனிருந்தார்.