கோவில் திருவிழாவுக்கு அனுமதி மறுத்து அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்
நெல்லிக்குப்பம் அருகே கோவில் திருவிழாவுக்கு அனுமதி மறுத்து அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பத்தை அடுத்த திருக்கண்டேஸ்வரம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் 12 நாள் உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. நாளை மறுநாள்(புதன்கிழமை) கஸ்தூரி பேட்டை தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் திருவிழா நடைபெற வேண்டும். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 7-வது நாள் உற்சவத்தை நடத்தக்கூடாது, பணம், பொருள் வசூல் செய்யக்கூடாது என்று அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி இருப்பதாகவும், அன்றைய தினம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த கஸ்தூரி பேட்டை தெருவை சேர்ந்த பொதுமக்கள் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, முத்துமாரியம்மன் கோவிலில் 7-வது நாள் திருவிழா நடத்தக்கூடாது என முறைப்படி அறிவிக்காமல் திடீரென்று இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த அனுமதி மறுத்து நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். எங்கள் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லை என்றால் ஊர் மக்கள் திரண்டு பெரிய அளவிலான போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். இதற்கு இது சம்பந்தமாக நாளை(அதாவது இன்று திங்கட்கிழமை) இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.