குண்டலபுலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை
கோர்ட்டு உத்தரவின் பேரில் குண்டலபுலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் இதுவரை 17 பேர் மாயமாகி இருப்பது தெரியவந்தது
விக்கிரவாண்டி
ஆதரவற்றோர் இல்லம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் குண்டலபுலியூர் கிராமத்தில் ஆதரவற்றோருக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது. இதை கேரளாவை சேர்ந்த ஜீபின் பேபி(வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 140 ஆதரவற்றோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி ஜாபருல்லா(45) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்துள்ளார். பின்னர் அமெரிக்கா சென்ற இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அப்போது ஜாபருல்லாவை பார்ப்பதற்காக வந்தபோது அவரிடம் ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர் ஜீபின் பேபி இடம் பற்றாக்குறையால் பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஜாபருல்லாவை இடமாற்றம் செய்துள்ளோம். அங்கு போய் பார்க்குமாறு கூறினார்.
தலைமறைவாகி விட்டார்
இதையடுத்து ஹனிதீன் பெங்களூரு சென்று ஆதரவற்றோர் இல்லத்தில் பார்த்த போது அங்கு ஜாபருல்லாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குண்டலபுலியூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்து கேட்ட போது, சமீபத்தில் இங்கிருந்து 50 பேர் தலைமறைவாகி விட்டனர். அதில் ஜாபருல்லாவும் ஒருவர் என ஜீபின் பேபி கூறியுள்ளார்.
இதையடுத்து ஜாபருல்லாவை காணவில்லை என கெடார் போலீஸ் நிலையத்தில் ஹனிதீன் கொடுத்த புகாரை ஏற்க போலீசார் மறுத்ததால், அவர் இதுகுறித்து சென்னை ஐகோா்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து ஜாபருல்லாவை கண்டுபிடித்து கோா்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
திடீர் சோதனை
அதன்பேரில் நேற்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் தங்கவேல் மற்றும் போலீசாரை கொண்ட குழுவினர் ஆதரவற்றோர் இல்லத்துக் வந்தனர். பின்னர் அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தின் கதவுகளை மூடி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் உரிமையாளர் ஜீபின் பேபி, அங்கு தங்கியுள்ள ஆதரவற்றோர் 137 பேரிடம் வீடியோ பதிவுடன் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆசிரமத்தில் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், 17 பேர் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இந்த விசாரணை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.