கும்பக்கரை, சுருளி அருவி பகுதிகளில் அதிகாரிகள் சோதனை
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதோடு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'தினத்தந்தி'யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து நேற்று பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி பகுதியில் உள்ள கடைகளில் கீழவடகரை ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனி வரும் காலங்களில் சுகாதாரமற்ற பொருட்களை விற்பனை செய்தாலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கம்பம் அருகே சுருளி அருவி பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் (கம்பம்) மணிமாறன், (உத்தமபாளையம்) மதன்குமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுகாதரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த 2 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. பின்னர் கடைகாரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.