சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் ஆய்வு


சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2023 2:45 AM IST (Updated: 18 May 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்கள் போராட்டம் எதிரொலியாக போஸ்பாரா-செம்பக்கொல்லி சாலையை புதுப்பிப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்

ஆதிவாசி மக்கள் போராட்டம் எதிரொலியாக போஸ்பாரா-செம்பக்கொல்லி சாலையை புதுப்பிப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆதிவாசி பலி

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி கிராமத்தில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி குட்டன் (வயது 49) என்பவர் காட்டு யானை தாக்கி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிவாசி மக்கள் உடலை வாங்க மறுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை வசதி இல்லாததால், வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாலை அமைத்து தர வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் செயல்படும் காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர வாகன வசதி செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சாலை அமைக்க ஆய்வு

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமையிலான அதிகாரிகள் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று ஆதிவாசி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் முதுமலை கரையோரம் உள்ள போஸ்பாரா-செம்பக்கொல்லி சாலையை ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த 3 கி.மீ. தூர சாலையை புதுப்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து துறை ரீதியாக பரிந்துரை செய்யப்படும். பின்னர் நிதி ஒதுக்கிய உடன் சாலை அமைக்கப்படும் என்றனர்.


Next Story