ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் ஆய்வு
கீழ்பட்டி ஊராட்சியில் வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
அமைச்சரிடம் மனு
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், கீழ்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்க வனத்துறை தரப்பிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் கீழ்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட வனத்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஆய்வு
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில் வனத்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து கீழ்பட்டி வனப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். உதவி வனப் பாதுகாவலர் மணிவண்ணன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வனச்சரக அலுவலர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, ஒன்றிய பொறியாளர் குகன், ஊராட்சி மன்ற தலைவர் லோகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கீழ்பட்டி ஊராட்சி வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக எடுக்கப்படும் இடத்திற்கு மாற்றாக வனத்துறைக்கு இரண்டு மடங்கு இடம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதற்கு விரைவில் வனத்துறைக்கு இரண்டு மடங்கு இடம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கீழ்பட்டி வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டால் கீழ்பட்டி, குளிதிகை, கருணீகசரித்திரம் மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.