பிரதிவிமங்கலம் ஏரியில் மீன்பிடிக்க தண்ணீரை வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


பிரதிவிமங்கலம் ஏரியில் மீன்பிடிக்க தண்ணீரை வெளியேற்றிய குத்தகைதாரருக்கு  அதிகாரிகள் எச்சரிக்கை
x

பிரதிவிமங்கலம் ஏரியில் மீன்பிடிக்க வீணாக தண்ணீரை வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் வளர்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. அதன்படி குத்தகைக்கு எடுத்தவர் கடந்த 2 மாதங்களாக மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஏரியில் இருந்த ஒரு மதகு மற்றும் அங்கு புதிதாக மதகு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் வழியாக தண்ணீரை வெளியேற்றி மீன்பிடித்து வந்ததனர். இதனால் மழைநீா் வீணாக வெளியேறியது. இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதையடுத்து கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் நேற்று பிரதிமங்கலம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மீன் குத்தகைக்கு எடுத்தவர் ஏரியில் இருந்து தேவையின்றி தண்ணீரை வெளியேற்றி மீன்பிடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மீன் குத்தகை எடுத்தவரை அதிகாரிகள் எச்சரித்தனர். தொடர்ந்து ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாத வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு மண்ணால் தடுப்புகள் அமைத்தனர். இதனால் பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.



Next Story