ஒயில் கும்மி அரங்கேற்றம்
வேப்பந்தட்டையில் ஒயில் கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி பொறியாளரான நல்ல மாணிக்கம் என்பவர் இளைய தலைமுறையினரிடம் ஒயில் கும்மி கலையை வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டபாடி ஆகிய கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு ஒயில் கும்மி மற்றும் கோலாட்ட கலைகளை இலவசமாக கற்றுக் கொடுத்தார். இவர்களுக்கான அரங்கேற்றம் வேப்பந்தட்டை பெருமாள் கோவில் திடலில் நேற்று நடைபெற்றது. அரங்கேற்ற விழாவினை முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். ஒயில் கும்மி ஆசிரியர் நல்லமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த அரங்கேற்ற விழாவில் 100-கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். இதில் பழங்கால ஒயில் கும்மி கலைஞர்கள் ஆறுமுகம், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வரைமுறைப்படுத்தி ஊக்கப்படுத்தினார்கள். இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். முடிவில் ஒயிலாட்ட கலைஞர் வேம்பு நன்றி கூறினார்.