மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் அம்மாசி. இவரது மனைவி ரங்கம்மாள் (வயது 69). இவர் மற்றும் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து தனியார் பஸ் மூலம் கரூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது தென்னிலை அருகே ஒரு பேக்கரியில் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தி உள்ளனர். ரங்கம்மாள் உடல் உபாதை கழிப்பதற்காக கரூர் -கோவை ரோட்டை கடந்து சென்றுள்ளார். அப்போது திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முதல்வர் பட்டியை சேர்ந்த கந்தசாமி (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ரங்கம்மாள் மீது மோதியது. இதில் ரங்காம்மாள் மற்றும் கந்தசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த ரங்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். கந்தசாமி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.