பூட்டி கிடந்த கடையில் மூதாட்டி பிணமாக மீட்பு
பூட்டி கிடந்த கடையில் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 44). இவர் திருச்சி மெயின் ரோட்டில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டிற்கு முன் புறத்தில் கட்டுமானத்திற்கு தேவையான டைல்ஸ், கடப்பா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த 3-ந் தேதி தனது குடும்பத்துடன் திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை கடையை திறந்த போது துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கண்ணன் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூட்டியிருந்த கடையின் உள்ள மூதாட்டி இறந்து கிடந்தது எப்படி?, அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.