ரூ.8 லட்சம் தங்க, வைர நகைகளை தவறவிட்ட மூதாட்டி: அதிரடி நடவடிக்கை மூலம் மீட்ட போலீசார்
சென்னையில் மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் தவற விட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசிப்பவர் கோட்டீஸ்வரி (வயது 64). இவர் கடந்த 27-ந் தேதி அன்று தியாகராயநகர் சென்றார். அங்குள்ள நகைக்கடையில் தனது மகளின் திருமணத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டின நகைகள் வாங்கினார். பின்னர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு ஒரு ஆட்டோவில் வந்தார். அங்கு ஆட்டோவை விட்டு இறங்கினார். இறங்கும்போது மறதியாக ரூ.8 லட்சம் நகைகள் வைத்திருந்த பையை ஆட்டோவில் வைத்து விட்டார்.
சற்று நேரத்தில் ஆட்டோவில் நகைகள் அடங்கிய பையை வைத்துவிட்டு இறங்கியது ஞாபகத்துக்கு வந்தது. உடனடியாக அவர் குறிப்பிட்ட ஆட்டோவை தேடிப்பார்த்தார்.
ஆனால் ஆட்டோவை காணவில்லை. உடனே இது குறித்து மயிலாப்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தினார்கள்.
நகைகள் மீட்பு
கண்காணிப்பு கேமரா மூலம், ஆட்டோவின் நம்பரை கண்டு பிடித்து, அதன் மூலம் ஆட்டோ ஓட்டுனரையும் கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டனர். ஆட்டோ ஓட்டுனரும் தனது ஆட்டோவின் பின்னால் நகைப்பை இருப்பதாக தகவல் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்டோவின் பின்னால் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு, கோட்டீஸ்வரியிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது தாண்டா, போலீஸ் என்பதையும் தனிப்படை போலீசார் நிரூபித்தனர்.
இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
இதே போல தனது ஆட்டோவில் தவற விட்டு சென்ற 4½ பவுன் தாலிச்சங்கிலியை, உரியவரிடம் பத்திரமாக போலீசார் மூலம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் லூயிஸ் (52) என்பவருக்கும் கமிஷனர் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.
சாலையில் கேட்பாரற்று கிடந்த 1 பவுன் கைச்செயினை பத்திரமாக ஒப்படைத்த இன்னொரு ஆட்டோ டிரைவர் சேகர் (60) என்பவருக்கும் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி பரிசு வழங்கினார்.