சிவகாசியில் முதியவர் அடித்துக்கொலை?
சிவகாசியில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசி போடி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 77). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் அதேபகுதியில் வசித்து வரும் உறவினர் கோமதிஜெயலட்சுமி என்பவரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சாமிநாதன் வீட்டின் அருகில் வசித்து வரும் சாலாட்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தெய்வம் என்கிற தெய்வமுனியசாமி என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சாமிநாதன், தெய்வமுனியசாமியிடம் நியாயம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தெய்வமுனியசாமி, சாமிநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கைஎலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சாமிநாதன் தாக்கப்பட்ட சம்வம் குறித்து கோமதி ஜெயலட்சுமி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சாமிநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். முதியவர் சாமிநாதன் அடித்துக்கொல்லப்பட்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தெய்வமுனியசாமி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.