குட்டையில் மூழ்கிய முதியவர் பிணமாக மீட்பு


குட்டையில் மூழ்கிய முதியவர் பிணமாக மீட்பு
x

வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய முதியவரை 21 மணி நேரத்துக்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பிணமாக மீட்டனர்.

வேலூர்

குட்டையில் மூழ்கிய முதியவர்

வேலூரை அடுத்த சித்தேரி கணேசபுரத்தை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி புஷ்பா. கணவன்-மனைவி நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு சென்றனர். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் புஷ்பா துணிகள் துவைத்து கொண்டிருந்தார். அபிமன்னன் குட்டையில் இறங்கி நீச்சலடித்து குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மனைவியின் கண் முன்பே மூழ்கினார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு வந்து குட்டையில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குட்டையில் இறங்கி அபிமன்னனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை 5 மணிவரையிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிணமாக மீட்பு

அதையடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். 18 பேர் கொண்ட குழுவினர் மாலை 6 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் குட்டையின் பல்வேறு இடங்களில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்களும் இணைந்து தேடினார்கள். இரவு 7 மணிவரை தேடியும் அபிமன்னன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை 6 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குட்டையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர தேடுதலுக்கு பின்னர் முதியவர் பிணமாக மீட்கப்பட்டார். குட்டையில் மூழ்கிய 21 மணி நேரத்துக்கு பின்னர் அபிமன்னன் உடல் சிக்கியது.

அரியூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story