முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரை அடுத்த கெளுத்தியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர் (வயது 63). இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அதே கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் தங்கி இருந்தார். அப்போது தனது தாத்தாவை தேடி 11 வயது சிறுமி ஒருவர் அங்கே வந்தார்.அங்கு தனது தாத்தா இல்லாததை அறிந்த அந்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்கு முயற்சி செய்தார். அப்போது தனது நண்பரின் பேத்தியான அந்த சிறுமியை அழைத்த பன்னீர், தன்னிடம் இருந்த மாம்பழத்தையும், ரூ.10-ஐயும் சிறுமியிடம் கொடுத்தார். பின்னர் அந்த சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
கோர்ட்டில் வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றார். மகள் அழுவதை பார்த்த பெற்றோர், சிறுமியை அழைத்து எதற்காக அழுகிறாய்? என்ன நடந்தது? என விசாரித்தனர். அப்போது தனக்கு நடந்த விவரத்தை சிறுமி கூறி அழுதார். இந்த விவரத்தை கேட்ட பெற்றோர் இது குறித்து பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீரை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் பன்னீருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.