காட்டு யானை தாக்கி முதியவர் பலி


காட்டு யானை தாக்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓவேலியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பிரேத பரிசோதனைக்கு உடலை கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

ஓவேலியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பிரேத பரிசோதனைக்கு உடலை கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விறகு சேகரிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் அடர்ந்த வனப்பகுதி, தேயிலை தோட்டங்கள் உள்ளன. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்களை தாக்கி வருகின்றன. தொடர்ந்து பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் அருகே டெலோவுஸ் பகுதியை சேர்ந்தவர் சிவனாண்டி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று விறகு சேகரிப்பதற்காக வீட்டில் இருந்து சிவனாண்டி நடந்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

காட்டு யானை தாக்கியது

இதனால் அவரது குடும்பத்தினர் தேடி சென்றனர். அப்போது டெலோவுஸ் 10-ம் நெம்பர் காபிக்காட்டில் காட்டு யானை தாக்கி சிவனாண்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு போலீசார் வனத்துறையினர் விரைந்து வந்து பலியான சிவனாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வாகனத்தில் எடுத்து செல்ல முயன்றனர்.

இதை கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி வாகனத்தை தடுத்து நிறுத்தி, உடலை கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து சிவனாண்டி உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து நியூ ஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story