ஆபத்தான நிலையில் உள்ள பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம்


ஆபத்தான நிலையில் உள்ள பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம்
x

ிருக்காட்டுப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை ஆஸ்பத்திரி

திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் கரையோரத்தில் 1965-ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்துக்கு அப்போதைய முதல்்-அமைச்சர் பக்தவச்சலத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, பூதலூர் பஞ்சாயத்து யூனியன் நிதியில் கட்டப்பட்டதாக அந்த கட்டிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த இந்த கட்டிடம் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழுந்ததால், புதிதாக கால்நடைஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் ஒவ்வொரு மழையின் போதும் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்து வருகிறது.

இடிந்து விழும் நிலையில் உள்ளது

இந்த பழைய ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனால் கடந்த இரு ஆண்டுகளில் பூதலூர் ஒன்றியத்தில் பழுதான பள்ளி கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது. கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தின் எதிரில் அரசு மதுபான கடை உள்ளது.

இடித்து அகற்ற வேண்டும்

அங்கிருந்து மதுபானங்களை வாங்கிக் கொண்டு வந்து இந்த கட்டிடத்தின் அருகில் அமர்ந்து மது அருந்துவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மழை காலத்திற்கு முன்னதாக எந்த அசம்பாவித சம்பவமும் நிகழ்வதற்கு முன்பு திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story