தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ராஜாமணி (வயது 63). இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு ராஜாமணி தனது கணவர், மகனிடம் தகராறில் ஈடுபட்டார். அதன்பிறகு அவர் தூங்க சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் முருகேசன் எழுந்து வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது அங்கு ராஜாமணி உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் உடனடியாக ராஜாமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜாமணி மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ராஜாமணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.