நத்தத்தில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி


நத்தத்தில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
x

நத்தத்தில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியானார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் நாச்சான். அவருடைய மனைவி பேச்சி (வயது 60). இவர், வாரச்சந்தைகளில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நத்தம் வாரச்சந்தை வளாகமான நல்லாகுளக்கரை பகுதியில் காய்கறி கடை நடத்துவதற்காக பேச்சி வந்திருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அதில், மின்சாரமும் வந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் பேச்சி மின்கம்பியை மிதித்துவிட்டார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பேச்சியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நத்தத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story