பாம்பு கடித்து மூதாட்டி சாவு
பாம்பு கடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மலர்கொடி (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு அவர்கள் தனித்தனியாக கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணாடி விரியன் பாம்பு மலர்கொடியின் கையில் 3 இடங்களில் கடித்துள்ளது. பாம்பு கடித்ததை உணராத மலர்க்கொடி, தனது கணவரை அழைத்து சிறுநீர் கழிக்க அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி அவரை அழைத்து சென்றுவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மலர்கொடியின் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட பெரியசாமி கட்டிலில் பார்த்தபோது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மலர்கொடியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.