தக்கலை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி
தக்கலை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள குமாரபுரம், கீழசித்திரங்கோடு பகுதியை சேர்ந்தவர் கனகம் (வயது75). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன் முருகேசன் (57) பேச்சிப்பாறை அருகில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் கீழசித்திரங்கோட்டில் கனகம் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டி கனகம் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டின் பின்புறமுள்ள ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றின் கரையில் துணிகளை வைத்துவிட்டு குளிக்க தண்ணீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். சிறிது நேரம் கடந்து அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றின் கரையில் மூதாட்டியின் துணிகள் மட்டும் இருப்பதை கண்டனர். தொடர்ந்து மூதாட்டிைய தேடிய போது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஆற்றுநீர் செல்லும் பகுதியில் தேடி சென்றனர். அப்போது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் அடையாமடை பகுதியில் ஆற்றில் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.