வீட்டிற்குள் அழுகியநிலையில் மூதாட்டி பிணம்
அருப்புக்கோட்டையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் துர்நாற்றம்
அருப்புக்கோட்டை வெள்ளைச்சாமி கொத்தனார் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது71). பரமசிவம் கடந்த 20 வருடங்களுக்கு முன் இறந்தவிட்டார்.
இவர்களுடைய ஒரே மகனும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஆதலால் மூதாட்டி ஜெயலட்சுமி தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அழுகிய நிலையில் மூதாட்டி
வீடு பூட்டி கிடந்தது. எந்தவித சத்தமும் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் ஜெயலட்சுமியின் வீட்டிற்கு சென்றனர். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே ஜெயலட்சுமி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.