மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வாகரையை சேர்ந்த கனகராஜ் (வயது 68) என்பவர் மனு கொடுக்க குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு வந்தார். அங்கிருந்த போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. அந்த பாட்டிலை அவரிடம் இருந்து போலீசார் பறித்தனர். தீக்குளிக்க முயற்சிக்கும் நோக்கத்தில் மண்எண்ணெயை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், 'உடுமலை பெரியபாப்பனூத்து கிராமத்தில் எனது தாயார் வழி சொத்து உள்ளது. எனது தாயாருடன் பிறந்த ஆண் வாரிசுகளின் மகன்கள் அந்த நிலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். எனது தாயாருக்கு சொந்தமான நிலத்தை பாக பிரிவினை செய்து கொடுக்குமாறு கூறியும் எனக்கு கொடுக்காமல் மிரட்டி வருகிறார்கள். இதன் காரணமாகவே நான் பழனிக்கு சென்றேன். எனக்கு வயதாகி விட்டது. மாலைக்கண் வியாதி உள்ளது.
திருமணம் செய்து கொள்ளவில்லை. எனக்கு வருமானம் இல்லாததால் தாய்வழி சொத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என்றார். பின்னர் கலெக்டரிடம் அழைத்துச்சென்று மனு கொடுத்து முறையிட வைத்தனர்.