மதுரைக்கு 25-ந்தேதி வரும் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு


மதுரைக்கு 25-ந்தேதி வரும் ஒலிம்பியாட்  ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு
x

மதுரைக்கு 25-ந்தேதி வரும் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

மதுரை

மதுரைக்கு 25-ந்தேதி வரும் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விழிப்புணர்வு

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28-தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதில் 187 நாடுகளைச் சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த சர்வேதச போட்டி, தமிழகத்தில் நடத்தப்படுவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த போட்டி தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்திடும் வகையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி, பள்ளிக்கல்வி துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள 1,323 அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வட்டார அளவில் வருகிற 20-ம் தேதியும், மாவட்ட அளவில் 25-ந் தேதியும் செஸ் போட்டிகள் நடத்தப்படுகிறன. மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெறக்கூடியவர்கள் மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள். இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடவும், செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பார்வையிடவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

3 இடங்கள்

மேலும் தேசிய அளவில் ஒலிம்பியாட் ஜோதி பொதுமக்கள் பார்வைக்கு வைத்திட 75 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் நமது மதுரை மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த ஒலிம்பியாட் ஜோதி வருகின்ற வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்தில் இருந்து நமது மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. இதனை சிறப்பான முறையில் வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பியாட் ஜோதி மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மீனாட்சி அம்மன் கோவில், வண்டியூர் தெப்பக்குளம் பகுதி, மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செஸ் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்டர், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள "நம்ம செஸ்- மதுரை மாஸ்" என்ற தலைப்பிலான 40 நொடிகள் ஓடக்கூடிய குறும்பாடல் வீடியோவை வெளியிட்டார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கரை கலெக்டர் வாகனத்தில் ஒட்டி விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.


Related Tags :
Next Story