ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரேநாளில் 3 காதல் ஜோடி தஞ்சம்-'இன்ஸ்டாகிராம்' காதலை கண்டு போலீசார் வியப்பு
ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரே நாளில் 3 காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. இதில் இன்ஸ்டாகிராம் காதலை கண்டு போலீசார் வியந்தனர்.
ஓமலூர்:
'இன்ஸ்டாகிராம்' காதல்
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி பழைய ஏனாதி காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் லோகேஷ் (வயது 23). இவரும், மதுரை திருமங்கலம் மேலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் கவுடா மகள் பட்டதாரியான முத்துமாரி (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துமாரி வீட்டை விட்டு வெளியேறி செம்மாண்டப்பட்டி வந்துள்ளார். பின்னர் ஏனாதி பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, 'இன்ஸ்டாகிராம்' காதல் விவரங்களை கேட்ட போலீசார் வியந்து போனார்கள். தொடர்ந்து இருவரது பெற்றோரையும் போலீசார் அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.
மேலும் 2 ஜோடிகள்
இதேபோல் தாரமங்கலம் பனிகுண்டான் பாறை பகுதி சேர்ந்த வெள்ளையன் மகன் சின்னதுரை (24). தறிதொழிலாளியான இவரும், சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகள் நித்யா (19) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர்.
தாரமங்கலம் சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் மகள் சுகன்யா (19) என்பவரும், ஆரூர்பட்டி பனங்காட்டு மேடு பகுதி சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (23) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தது. போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.