டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதி கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி


டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதி கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி
x

டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய கோர விபத்தில் தாய்- மகன் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

தர்மபுரி அருகே நூலஅள்ளி ஊராட்சி சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று காலை முனுசாமி குடும்பத்தினர் உள்பட 12 பேர் தர்மபுரியில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டாவிற்கு கற்றாழை கயிறு திரிக்கும் கூலி வேலை செய்வதற்காக டிராக்டரில் புறப்பட்டு சென்றனர். டிராக்டரை முத்து என்பவர் ஓட்டினார்.

உணவு பொருட்கள் மற்றும் கற்றாழை அடிக்கும் என்ஜினுடன் அவர்கள் காலை 7 மணி அளவில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஹள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

பஸ் மோதியது

அப்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை விருதுநகர் மாவட்டம் ஆமரத்தூரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவர் ஓட்டிச் சென்றார். முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை, ஆம்னி பஸ் முந்த முயன்றது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், டிராக்டரின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ் மோதியதில் டிராக்டர் நொறுங்கி சாலையில் கவிழ்ந்தது.

5 பேர் பலி

இந்த கோர விபத்தில் டிராக்டரில் இருந்த முனுசாமி, அதேபகுதியை சேர்ந்த சதீஷ் மகளான 3 மாத குழந்தை வர்ஷினி, சின்னசாமி என்பவரின் மனைவி வசந்தி (45), மகன் முத்து (20), மல்லி (65) ஆகிய 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் மனைவி புஷ்பா (35), காசி (60), பலியான முனுசாமியின் மகன் அருள் (18), முத்துவின் மனைவி காவியா (19), முருகன் (45), சதீஷ் (24), இவருடைய மனைவி செல்லம்மாள் (19) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் சதீஷ், செல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் ஆவர். படுகாயம் அடைந்த 7 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் கருப்புசாமியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story