ஆம்னி பஸ் கவிழ்ந்து கிளீனர் பலி; 9 பேர் படுகாயம்
கயத்தாறு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்னி பஸ்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று ஒரு ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
பஸ்சை கேரளாவை சேர்ந்த தாஜூதீன் (வயது 54) என்பவர் ஓட்டினார். கிளீனராக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் தனராஜ் (30) என்பவர் இருந்தார்.
கிளீனர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. நாற்கர சாலையில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு, சாலையோரம் நின்று கொண்டு இருந்த காரின் மீது மோதியது. பின்னர் ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கிளீனர் தனராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். டிரைவர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆம்னி பஸ் மோதிய காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி நின்றதால் உயிர்தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.