கயத்தாறில் கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
கயத்தாறில் கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 224-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கயத்தாறில் உள்ள அவரது நினைவு மண்டபம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள கோட்டையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்த பொதுமக்கள், தங்களுக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் மணிமண்டபத்திற்கு 15 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்தனர். இவர்களை தூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கயத்தாறு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதை ஏற்க மறுத்து அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், போலீசார் ஏற்பாடு செய்த வேனில் கயத்தாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.