மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதி டெய்லர் பலி : மகள் படுகாயம்
உத்தமபாளையத்தில் மோட்டாா்சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் டெய்லா் பலியானார்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் தென்னகர் காலனியை சேர்ந்தவர் சையது சேக் இப்ராகிம் (வயது 45). டெய்லர். இவரது மகள் லைக்கா இர்சத் (20). இவர், உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தந்தையும், மகளும் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை லைக்கா இர்சத் ஓட்டினார். சையது சேக் இப்ராகிம் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக, இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தந்தையும், மகளும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சையது சேக் இப்ராகிம் பரிதாபமாக இறந்தார். லைக்கா இர்சத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான கருணாகர பாண்டியனை கைது செய்தனர்.