மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வியாபாரிகள் 2 பேர் பலி
போடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி வியாபாரிகள் 2 பேர் பலியாகினர்
மாட்டு வியாபாரிகள்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது 50), பாலு (55). இவர்கள் 2 பேரும் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இவர்கள், போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தில் நடந்த வாரச்சந்தையில் மாடுகளை வாங்க மோட்டார்சைக்கிளில் சென்றனர்.
பின்னர் அவர்கள், மாடுகளை வாங்கி சரக்கு வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்து தேவாரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். பாலு பின்னால் அமர்ந்திருந்தார். போடி-தேவாரம் சாலையில், சுண்ணாம்பு காளவாசல் பாலம் என்னும் இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்தது. இதேபோல் எதிரே தேவாரத்தில் இருந்து போடி நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பஸ்சிற்கு அடியில் சிக்கி கொண்டனர். இதையடுத்து 2 பேர் மீதும் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மல்லையகவுண்டன்பட்டியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கண்ணன் (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி வியாபாரிகள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.