மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதி தொழிலாளி சாவு
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதி தொழிலாளி இறந்து போனார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருமண விழா
சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு தெற்கு தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் வாசுதேவன் (வயது 22). இவரது உறவினர் திருமணம் நேற்று நடந்தது.
திருமண விழாவுக்கு சென்னையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த உறவினர்கள் கருவேலம்பாடு தெற்கு தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கமல் (38), கீழபுளியங்குளத்தை சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் விஜயகுமார் (27) ஆகியோர் வந்திருந்தனர்.
லோடு ஆட்டோ மோதியது
நேற்று மாலையில் வாசுதேவன், கமல், விஜயகுமார் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளம் சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ஆனந்தபுரம் கல்லறை தோட்டம் அருகில் வந்தபோது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். லோடு ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தொழிலாளி சாவு
அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து 3 பேரையும் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லோடு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.