பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில்7 இடங்களில் கடன் வழங்கும் முகாம்:நாளை நடக்கிறது


பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில்7 இடங்களில் கடன் வழங்கும் முகாம்:நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கும் முகாம் 7 இடங்களில் நாளை நடக்கிறது.

தேனி

மானியத்துடன் கடன்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன், கறவை மாட்டுக்கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்ப்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,

கூட்டுறவு சங்கம்

தேனி மாவட்டத்தில் இந்த டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன் பெறுவதற்கான முகாம்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்கள், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அல்லிநகரம் கிளை, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போடி கிளை, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகிய 7 இடங்களில் நடக்கிறது.

இந்த முகாமில் பங்கேற்று கடன் பெறுவதற்கு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமான சான்று, தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகை ரூ.25 ஆயிரம் என்றால் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஒரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

கடன் தொகையாக ரூ.50 ஆயிரம் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 2 பேர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும். கடன் தொகை ரூ.1 லட்சத்துக்கு மேல் என்றால் கோரப்படும் தொகைக்கு 2 மடங்கு சொத்து அடமான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்விக்கடன் பெறுவதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது வங்கி செலான் நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story