காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில்கடல்பாசி வளர்ப்பு, வர்த்தகம் குறித்து மீனவர்களுக்கு பயிற்சி


காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில்கடல்பாசி வளர்ப்பு, வர்த்தகம் குறித்து மீனவர்களுக்கு பயிற்சி
x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சித்துறையின் சார்பில் மன்னார்வளைகுடா பகுதி மீனவர்களுக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் வர்த்தகம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

மதுரை


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சித்துறையின் சார்பில் மன்னார்வளைகுடா பகுதி மீனவர்களுக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் வர்த்தகம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

கடற்பாசி வளர்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ரூசா திட்டத்தின் கீழ் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பாசி வளர்ப்பு மற்றும் வர்த்தகம் குறித்த 3 நாள் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பகுதியில் உள்ள பூர்வீக கடற்பாசி இனங்களின் வளர்ப்பு மற்றும் சாகுபடிகளை ஊக்குவிப்பதற்கு கொள்கை வகுப்பாளர்களை வலியுறுத்தும் வகையிலும், அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கடல் அமிலத்தன்மையின் அதிகரிப்பை தணிக்கவும், தமிழக கடற்கரையில் கடற்பாசி விவசாயத்தை அதிகரிப்பது காலநிலை மாற்றத்தை தணிக்கும் நடவடிக்கைக்காகவும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

துணைவேந்தர் குமார் உத்தரவின்படி, புதுமடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில் ரூசா பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் வரவேற்றார். பல்கலைக்கழக ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் புலத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் கடல் பாசி ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி வீரகுருநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பயிற்சியின் போது, தொழிற்சாலைகளுக்கு கடற்பாசி மூலப்பொருட்களின் தேவை அதிகரிப்பு, மன்னார் வளைகுடாவில் கடற்பாசி விதைகள் பராமரிப்பின் முக்கியத்துவம், கடல் பாசி வளர்ப்பதற்கான இடங்களை தேர்வு செய்தல், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குதல், மன்னார் வளைகுடாவில் கடற்பாசி சாகுபடிக்கான தொழில் முனைவோர் வாய்ப்பு மற்றும் வர்த்தகம், உள்ளூர் கடற்பாசி இனங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கடற்பாசி விதைகள்

அத்துடன் கடலோரக் கூண்டு தயாரித்தல், கடற்பாசி நாற்றுகளை பொதி செய்தல் மற்றும் கடற்கரையில் நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் நடைமுறை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டபம் மத்திய கடல் மற்றும் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ஜான்சன், இந்திய கடற்பாசி வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்தும், கடற்பாசி வளர்ப்புக்கு தகுதியான இடங்களை தேர்வு செய்தல் மற்றும் அதிக லாபம் தரக்கூடிய வெவ்வேறு விதமான கடற்பாசி இனங்கள் ஆகியன குறித்து விளக்கினார். தொழில்நுட்ப வல்லுநர் மனோகரன் கடற்பாசி வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஜெரால்டு வில்சன் நன்றி கூறினார்.

பயிற்சி முகாமில், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கடற்பாசி பயிற்சி கையேடு, கடற்பாசி விதைகள் மற்றும் மூங்கில் மிதவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சந்தானகிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் கார்த்திகேயன், மண்டபம் சீனியப்பா தர்காவில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் சி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story