மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் `எய்ம்ஸ் எங்கே' என்று தொடர் முழக்க போராட்டம் - எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் எங்கள் எய்ம்ஸ் எங்கே என்ற தலைப்பில் நடந்த தொடர் முழக்க போராட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் எங்கள் எய்ம்ஸ் எங்கே என்ற தலைப்பில் நடந்த தொடர் முழக்க போராட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம்
"எங்கள் எய்ம்ஸ் எங்கே?" எனும் தலைப்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை ெதாடங்க வேண்டும் என வலியுறுத்தியும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோர் செங்கல்லை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். எய்ம்ஸ் மருத்துவமனை கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் செங்கலுடன் படுத்தவாறு வந்து தொண்டர் ஒருவர் பங்கேற்றார்.
ராகுல்காந்தி பிரதமர்
கூட்டத்தில். மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், 2024-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் முதல் பணியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்றார். சு.வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும் போது கூட அவர்களால் கல்லூரியை பார்க்க முடியாது. கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடி தான் என்றார்.
நவாஸ்கனி எம்.பி. பேசுகையில், பா.ஜ.க. தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் நெருக்கடி கொடுப்பது, எம்.எல்.ஏ.க்களை விலை பேசி ஆட்சியை பிடிப்பதுதான் அவர்களின் வேலையாக உள்ளது என்றார்.
பாதயாத்திரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டிசைன் தயாரிப்பதற்கான டெண்டரே இன்னும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். பாத யாத்திரையின் போது மதுரை வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன சொல்வார்? கவர்னர் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கிறார். பிரதமர் தமிழ்நாட்டையே அழிக்க நினைக்கிறார் என்றார்.