சேலம் மாநகராட்சி சார்பில் 2 லட்சத்து 33 ஆயிரம் தேசியக்கொடிகள் தயார்-வீடு, வீடாக வழங்கும் பணி தொடக்கம்
சேலம் மாநகராட்சி சார்பில் 2 லட்சத்து 33 ஆயிரம் தேசியக்கொடிகளை வீடு, வீடாக வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
75-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றும் வகையில் 2 லட்சத்து 33 ஆயிரம் வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தேசியக்கொடிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட ராஜாஜி ரோடு, வின்சென்ட், அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட புதுத்தெரு, பொன்னம்மா பேட்டை வாசக சாலை பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தேசியக்கொடிகளை வழங்கினர்.
இதில் மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், நிலைக்குழுத்தலைவர் சாந்த மூர்த்தி, கவுன்சிலர்கள் இளங்கோ, இந்துஜா, உதவி ஆணையாளர்கள் கதிரேசன், செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.