உணவு-ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்கம்
உணவு-ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்கப்பட்டது.
வேளாண் துறை, உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்து மிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், 'சோளம், கம்பு, ராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்து மிகு சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த தானியங்களில் சிறப்பு, விதை மானியம், பயிர் பாதுகாப்பு திட்டங்கள், மக்காசோளம் படைப்புழு கட்டுப்பாடு முறை உள்ளிட்ட விபரங்கள் மக்களை சென்றடைய செய்ய வேண்டும். 14 யூனியனிலும் விவசாயிகளை சந்தித்து, தெளிவுபடுத்த வேண்டும்' என வலியுறுத்தினார். இதுகுறித்த துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர்கள் ஆசைதம்பி, சண்முகசுந்தரம், சாவித்ரி, மரகதமணி, உதவி இயக்குனர் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.