சுதந்திர தினத்தில்விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது வழக்கு
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
விடுமுறை
சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா? அல்லது அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளதா? என்பதையும், இதற்காக தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் முன் அனுமதி பெறப்பட்டதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
வழக்கு
மாவட்டத்தில் உள்ள 55 கடைகளில் நடத்திய ஆய்வில் 37 கடைகளிலும், 56 உணவு நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 50 நிறுவனங்களிலும், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 4 நிறுவனங்களிலும் என மொத்தம் 117 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 91 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், முன் அனுமதி பெறாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 91 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்து தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.