சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது அரசு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவு


சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது  அரசு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்காக வழங்கப்பட்ட 10 கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அவரவர் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளார்கள். அந்த கோரிக்கைகளை விரைந்து முடித்திடும் விதமாக பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை செயல்படுத்தும் விதமாக செஞ்சி சட்டமன்ற தொகுதியில் நீண்டநாட்களாக செயல்படுத்தப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

உரிய நடவடிக்கை

செஞ்சி சட்டமன்ற தொகுதியில் செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கிற்கு நீலாம்பூண்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையில் சாலை, பூங்காக்கள், பேட்டரி கார், ரோப் கார் வசதி, அகழியை தூர்வாரி மழைநீரை சேகரித்தல், சக்கரை குளம், செட்டிக்குளத்தை தூர்வாரி படகு சவாரி ஏற்படுத்துதல், செஞ்சி அரசு ஆஸ்பத்திரியை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்துதல், புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் அமைத்து தருதல், செஞ்சி பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்களவாய் சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து இருவழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாலம் அமைத்துத்தரவும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவலூர்பேட்டையை மையமாக கொண்டு பஸ் நிலையத்துடன் கூடிய வணிக வளாகம், மேல்மலையனூர் வட்டாரத்திற்கு புதிய போலீஸ் நிலையம், புதிய அரசு தொழில்நுட்ப கல்லூரி அமைத்து தருதல், வளத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தவும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. 'இன்றைய செயல் நாளைய வரலாறு" என்ற அடிப்படையில் ஒவ்வொரு கோரிக்கையும் பொதுமக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்தும் கட்டமைப்பாக உள்ளதாலும் தங்களது துறையின் தன்மையை மேம்படுத்தும் என்பதாலும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தனிக்கவனம் செலுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story