குப்பை கொட்டுவதை தடுக்க நயினார்குளம் கால்வாய் கரையில்கம்பி வேலி அமைக்க வேண்டும்- நெல்லை மாநகராட்சி மக்கள்குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு
குப்பை கொட்டுவதை தடுக்க நயினார்குளம் கால்வாய் கரையில் கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
குப்பை கொட்டுவதை தடுக்க நயினார்குளம் கால்வாய் கரையில் கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
அவர்களிடம் மாநகரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
நயினார்குளம் கால்வாய்
நெல்லை தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த நயினார்குளம் நீர்ப்பாசன உதவி செயலாளர் முருகன் தலைமையில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அதில், 'நெல்லை நகரின் மையப்பகுதியில் நயினார் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்துக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கால்வாய் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கால்வாயில் குப்பைகளை கொட்டுகிறார்கள். அதை தடுக்கும் வகையில் கால்வாய் கரையில் கம்பி வேலி அமைக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
குடிநீர் பிரச்சினை
தச்சநல்லூர் 1-வது வார்டு பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'சப்பாணி மாடன் கோவில் பகுதியில் 1 வாரமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. எனவே சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'கொக்கிரகுளம் பகுதியில் கழிவு நீரோடையை சீரமைத்து தர வேண்டும்' என்று கேட்டுள்ளனர்.
புதிய குடிநீர் குழாய்
பேட்டையை சேர்ந்த முகமது கமாலுதீன் அளித்த மனுவில், பேட்டை பகுதி குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசுகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சாந்திநகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் வீட்டுக்குள் வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பழையபேட்டை பகுதி மக்கள் அளித்த மனுவில், 'நாராயணசாமி கோவில் வடக்கு தெரு பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் குழாய் பொருத்த வேண்டும்' என்றும் கூறி உள்ளனர்.
இதேபோல் மாநகர பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் மாநகராட்சிக்கு மனுக்கொடுக்க வந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. அதுபோல் மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் முககவசம் அணிந்து வந்தனர்.
இந்த கூட்டத்தில். உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன் (நெல்லை), கிறிஸ்டி (தச்சநல்லூர்), ஜஹாங்கீர் பாஷா (மேலப்பாளையம்), காளிமுத்து (பாளையங்கோட்டை), மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.