விபத்தில் பலியான டிரைவர் மீது மோதிய வாகனம் அடையாளம் தெரிந்தது
மார்த்தாண்டத்தில் டெம்போ டிரைவர் மீது மோதிய அரசு பஸ்சின் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் டெம்போ டிரைவர் மீது மோதிய அரசு பஸ்சின் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
டெம்போ டிரைவர்
மார்த்தாண்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது அருமனை அருகே புத்தன்சந்தையில் வசித்து வரும் டெம்போ டிரைவரான மோகன் (வயது53) என்பது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோகன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கேரளாவை சேர்ந்தவர்
இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆய்வு செய்தார். அப்போது, டெம்போ டிரைவரான மோகன் அந்த வழியாக சென்ற ஒரு அரசு பஸ்சின் முன்பக்க வாசல் வழியாக இறங்கும்போது அவர் கீழே விழுவதும், பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கி செல்வதும் பதிவாகி இருந்தது.
அதைதொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணை நடத்தியதில் டெம்போ டிரைவர் மோகன், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் அருமனை அருகே புத்தன்சந்தை பகுதியில் வாடகை அறையில் வசித்துக்கொண்டு ஒரு தனியார் குவாரியில் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
பஸ் டிரைவர் கைது
மேலும், நேற்று முன்தினம் புத்தன்சந்தையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு வந்த மோகன், பஸ் மார்த்தாண்டம் சந்திப்பில் பஸ் நிலையத்திற்கு திரும்பும் போது முன்பக்க வாசல் வழியாக இயக்கியபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதில் இறந்தது தெரியவந்தது. விபத்துக்கு காரணமான அந்த பஸ் குழித்துறை அரசு பணிமனையை சேர்ந்தது என்பதும், பஸ்சை ஓட்டியது குழித்துறை பணிமனையை சேர்ந்த டிரைவர் வேலாயுதம் பிள்ளை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான டிரைவர் மோகனின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உறவினர்கள் மார்த்தாண்டத்திற்கு விரைந்துள்ளனர்.