பள்ளி திறந்த முதல் நாளிலேயே பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தவிப்பு


பள்ளி திறந்த முதல் நாளிலேயே  பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தவிப்பு
x

போடி அருகே பள்ளி திறந்த முதல் நாளிலேயே பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் தவித்தனர். இதையடுத்து நடவடிக்கை கோரி மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தேனி

பஸ் வசதி

தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறைக்காடு மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. போடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு 30 மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு பள்ளிக்கூட வசதி இல்லாததால் போடிக்கு சென்று படித்து வருகின்றனர். இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு தினமும் 2 ஆட்டோக்களில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் ேகாடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கலெக்டரிடம் மனு

அதன்படி தேனி மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் சிறைக்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் புதிய சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதற்கு ஆட்டோவிற்காக காத்திருந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆட்டோ வரவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர் அவர்களுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மாணவர்களை கலெக்டர் சந்தித்து பேசினார். பின்னர் மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்:-

தினந்தோறும் கூலி வேலைக்கு செல்லும் தங்களால் ஆட்டோ வாடகை செலுத்த முடியாது. பள்ளிக்கு செல்ல இயலாததால் தங்களால் படிக்க முடியாமல் போனதாகவும், தங்கள் குழந்தைகளாவது படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் தற்போது பள்ளிக்கு சென்று வர வாகன வசதி இல்லாததால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.


Next Story