போடிமெட்டு மலைப்பாதையில்தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய வேன்:17 பேர் உயிர் தப்பினர்
போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் வேன் தொங்கியது. இந்த விபத்தில் 17 பேர் உயிர் தப்பினர்.
போடிமெட்டு மலைப்பாதை
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் பங்கஜ் காசன் நீலம்முரி. அவருடைய மனைவி உஷா (வயது 60). இவர், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்தார். இதற்காக எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 15 பேருடன் வேனில் தேனிக்கு நேற்று வந்து கொண்டிருந்தார். வேனை எர்ணாகுளத்தை சேர்ந்த ரெஜிகிருஷ்ணன் என்பவர் ஓட்டினார்.
போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடியது. அப்போது வேனில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினர். நல்லவேளையாக வேன் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி நின்றது.
அந்தரத்தில் தொங்கிய வேன்
இந்த விபத்தில் வேனின் முன்பகுதியில் உள்ள 2 சக்கரங்கள் தடுப்புச்சுவரில் இருந்து உடைந்த கற்களில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து போலீசார் அவர்களை மீட்டனர். பின்னர் விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் ரெஜிகிருஷ்ணன், உஷா உள்பட 17 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் சுமார் 30 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.