கம்பைநல்லூர் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கம்பைநல்லூர் சந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் சந்தை
தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர் ஆட்டு சந்தை பிரபலமானது ஆகும். இந்த சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை நடைபெறுகிறது. மேலும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்று ஆட்டு சந்தை கூடியது. இந்த ஆட்டு சந்தையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மொத்தம் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனை ஆகியது.
கட்டணத்துக்கு கூடுதல் வசூல்
அதே நேரத்தில் இந்த சந்தையில் ஏலத்திற்கு ஒரு ஆட்டிற்கு ரூ.5 கட்டணமாக அரசு நிர்ணயித்து இருந்தாலும், ஒரு ஆட்டிற்கு ரூ.45 வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக ஆட்டு வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.