சித்திரை திருவிழாவையொட்டிவீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் தேரோட்டம்:திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சித்திரை திருவிழாவையொட்டி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து
சித்திரை திருவிழா
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது.
விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அதன்படி, விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நூற்றுக்கணக்கான திருநங்கைகளும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
இதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி யாழி பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. பின்னர் கவுமாரியம்மன் உற்சவசிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தேருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ சிலை அமர்த்தப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அப்போது ஓம் சக்தி பராசக்தி என்று கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தேர் அசைந்தாடி சென்றது. பின்னர் மூலவர் சன்னதிக்கு எதிராக தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேரை பக்தர்கள் தொட்டு வணங்கினர்.
பாதுகாப்பு
இந்த நிகழ்ச்சியில், தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர் கீதா சசி, துணை தலைவர் சாந்தகுமார், செயல் அலுவலர் ஆறுமுகநயினார், உப்புக்கோட்டை ஊராட்சி தலைவர் மூர்த்தி, துணை தலைவர் நெப்போலியன், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பார்வையிட்டனர்.
மூலவர் சன்னதியில் நிறுத்தப்பட்ட தேர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ரதவீதிகளில் சுற்றி வந்து நிலைக்கு வருகிறது. தொடர்ந்து 17-ந் தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.