ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

ஆடி மாத வெள்ளிக்கிழமை

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிமாவு உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

பின்னர் அம்மனுக்கு 1,008 எலுமிச்சை பழங்களால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சிறப்பு வழிபாடு

கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் வளாகத்தில் உள்ள யதுகுலவள்ளி அம்பாளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று காலை ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 1,008 தாமரை பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சவுடம்மன் கோவில், சாலை காளியம்மன் கோவில்களிலும் பூஜை நடந்தது. பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை முதலே பக்தா்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், பத்ரகாளிபுரம் பத்ரகாளி அம்மன் கோயில், உப்புக்கோட்டை அங்காள பரமேஸ்வரி, கன்னிகா பரமேஸ்வரி கோவில்களிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.


Related Tags :
Next Story